Students can Download 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.1 விருந்து போற்றுதும்!
கற்பவை கற்றபின்
Question 1.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவர்க்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.
Answer:
அமுதன் : வீட்டில் திண்ணை அமைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தாயா?
மதி : கேட்டேன். வழிப்போக்கர்கள் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் என்று அப்பா கூறினார்.
அமுதன் : விருந்தினர் பேணல் குறித்து உன் வீட்டார் உனக்கு கூறிய செய்தி யாது?
மதி : வணக்கம் கூறி வரவேற்றல், அமர வைத்தல், தண்ணீர் கொடுத்தல், உணவு உண்ணச்செய்தல் ஆகியவையே விருந்தினர் பேணும் முறையாகும் என்றனர்.
அமுதன் : ஈகை என்றால் என்ன என்பது பற்றி கேட்டாயா?
மதி : தமிழர் பண்பாட்டில் ஈகை குறித்தும் இலக்கியங்கள் கூறுகின்றன. பாரி என்ற குறுநில
மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்ததாகவும் பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதையும் நாம் பாடநூலில் படித்திருக்கிறோம் அல்லவா? அதுதான் ஈகை என்றனர்.
அமுதன் : ‘பசித்தவர்க்கு உணவிடல்’ குறித்து உன் பெற்றோர் கூறிய செய்திகளை எனக்கும் கூறு.
மதி : “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது இலக்கியம். பசித்துயரால் வாடுபவருக்கு உணவளிப்பது அவருக்கு புத்துயிர் வந்தது போன்றிருக்கும் என்று அம்மா கூறினார்.
Question 2.
“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ………………” –
பாரதிதாசனார் இவ்வாறாகக் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்.
கிடைத்த இரையைப் பகிர்ந்துண்ணும் பொருட்டு புறாக்கள் வட்டமாய் அவ்விரையைச் சுற்றி கூடி நின்றன. இக்காட்சியானது இதழ் விரிந்திருக்கின்ற தாமரை மலரைப் போன்று காட்சியளிப்பதாக கவிஞர் உவமித்துள்ளார்.
மு.வரதராசனார் இயற்றிய குறட்டை ஒலி’ என்ற சிறுகதையில் ஓர் ஏழைத்தாய்தன்குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலால் பட்டினி கிடந்த நாய்க்குட்டிகளுக்கு ஊட்டுகிறாள். ஓர் ஏழைத்தாயின் வறுமையிலும் பகிர்ந்துண்ணும் தாய்மைப் பண்பு இக்கதையில் புலப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலத்தில் பகிர்ந்துண்ணும் வழக்கம் அதிகமாக மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அன்றாடம் நாம் காணும் ஐந்தறிவு உயிரினமாகிய காக்கை கூட தனக்குக் கிடைத்த சிறிதளவு இரையையும் தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும் பொருட்டு கரைந்து தன் இனத்தை அழைத்து உண்கிறது. இத்தகைய உயிரினங்களின் செயல்களைக் கண்டாவது மனிதர்கள் பகிர்ந்துண்ணும் பழைய பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பசிப்பிணி நீங்கும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
Answer:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
Question 2.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
Answer:
ஆ) இன்மையிலும் விருந்து
குறுவினா
Question 1.
‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.
ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.
சிறுவினா
Question 1.
புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
Answer:
- அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
- காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
- வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
- விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
- இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.
நெடுவினா
Question 1.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை :
என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.
இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.
உணவு உபசரிப்பு :
- • வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
- தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
- உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
- வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
- வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
- உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.
அன்பு வெளிப்பாடு :
- ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
- பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
- உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
- உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
- உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.
முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1
Question 2.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா
Question 3.
தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை
Question 4.
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ண
Question 5.
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்
Question 6.
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை
Question 7.
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை
Question 8.
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி
Question 9.
“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
Question 10.
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Question 11.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்
Question 12.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்
Question 13.
“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா
Question 14.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை
Question 15.
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
Question 16.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா
Question 17.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்
Question 18.
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்
Question 19.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்
Question 20.
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்
Question 21.
பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 22.
விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) மாமல்லபுரம்
ஈ) திருச்சி
Answer:
அ) சிதம்பரம்
Question 23.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) கபிலர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) திருவள்ளுவர்
Question 24.
“காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
Question 25.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்
குறுவினா
Question 1.
விருந்தோம்பல் என்றால் என்ன?
Answer:
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும்
கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவையே விருந்தோம்பல் எனப்படும்.
Question 2.
உலகம் நிலைத்திருக்கிறதற்கான காரணங்கள் எவையென இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்?
Answer:
- தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
- அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது, பிறருக்குக் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலைத்திருக்கிறது.
Question 3.
‘உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு’ என்பதைக் குறித்து நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
- விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.
Question 4.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து புறநானூறு எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
Answer:
- வீட்டிற்கு வந்தவர்க்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
- தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தாள் தலைவி.
Question 5.
வாளையும் யாழையும் பணையம் வைத்து விருந்தளிக்கப்பட்ட செய்தியைக் கூறு.
Answer:
பழைய வாள் :
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்
சீறியாழ் :
இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.
Question 6.
இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுது.
Answer:
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. தானியமில்லாததால் அன்று விதைத்துவிட்டு வந்த விதை நெல்லை அரித்துச் சமைத்து விருந்து படைத்தார்.
Question 7.
நெய்தல் நிலத்தவரின் விருந்தளிப்பு குறித்துச் சிறுபாணாற்றுப்படை வழியே செய்தியைக் கூறு.
Answer:
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.
Question 8.
பழந்தமிழர் விருந்தை எதிர்கொள்ளும் தன்மைப் பற்றி குறுந்தொகை கூறும் செய்தி யாது?
Answer:
இல்லத்தின் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்ததைக் குறுந்தொகை கூறுகிறது.
Question 9.
இல்ல விழாக்கள் யாவை?
Answer:
- திருமணத்தை உறுதி செய்தல்
- பிறந்தநாள்
- திருமணம்
- புதுமனை புகுவிழா
- வளைகாப்பு
Question 10.
மினசோட்டா தமிழ்ச் சங்க ‘வாழையிலை விருந்து விழாவில்’ வைக்கப்படும் உணவுகள் யாவை?
Answer:
- முருங்கைக்காய் சாம்பார்
- வெண்டைக்காய் கூட்டு
- மோர்க்குழம்பு
- தினைப்பாயாசம்
- வேப்பம்பூ ரசம்
- அப்பளம்
Question 11.
யாருடைய ஆட்சி காலத்தில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?
Answer:
நாயக்கர், மராட்டியர்.
Question 12.
“காலின் ஏழடிப் பின் சென்று” – இப்பாடலடி உணர்த்தும் செய்தி யாது?
Answer:
- பண்டையத் தமிழர் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது வழியனுப்பும் விதம்.
- வழியனுப்பும் போது அவர்கள் செல்ல இருக்கின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.
Question 13.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை?
Answer:
- தொல்காப்பியம்
- புறநானூறு
- திருக்குறள்
- நற்றிணை
- சிலப்பதிகாரம்
- குறுந்தொகை
- கம்பராமாயணம்
- கொன்றை வேந்தன்
- கலிங்கத்துப்பரணி
Question 14.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் எவை?
Answer:
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.
Question 15.
விருந்து பேணுவதற்காக எவற்றையெல்லாம் தலைவன் பணையம் வைத்ததாகப் புறநானூறு கூறுகின்றது?
Answer:
இரும்பினால் செய்யப்பட்ட பழைய வாள், கருங்கோட்டுச் சீறி யாழ்.
Question 16.
விருந்தினர் என்பவர் யார்? (அல்லது) விருந்தே புதுமை – பொருள் விளக்கம் தருக.
Answer:
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். இதனையே தொல்காப்பியர் ‘விருந்தே புதுமை’ என்கிறார்.
Question 17.
விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிடும் புலவர்கள் யாவர்?
Answer:
- தொல்காப்பியர்
- கம்பர்
- திருவள்ளுவர்
- செயங்கொண்டார்
- இளங்கோவடிகள்
- ஔவையார்
Question 18.
மோப்பக் குழையும் அனிச்சம் உவமை கொண்டு வள்ளுவர் வலியுறுத்தும் கருத்து யாது?
Answer:
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதாகும்.
Question 19.
“விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்தக் காரணம் யாது?
Answer:
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துகிறாள்.
Question 20.
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
Answer:
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆகும்.
Question 21.
உலகம் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது?
Answer:
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுத்து மகிழ்வர் நல்லோர். அத்தகையவர்களால் தான் உலகம் இன்றும் நிலைபெற்று இருக்கின்றது.
Question 22.
“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : நற்றிணை
தொடர் விளக்கம் : நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நற்பண்பு குடும்பத்தலைவிக்கு உண்டு.
Question 23.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : குறுந்தொகை
தொடர் விளக்கம் : இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று கேட்கின்றனர்.
சிறுவினா
Question 1.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கூறு.
Answer:
- வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்தனர் பழந்தமிழர் என்று புறநானூறு கூறுகிறது.
- தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தளித்தாள் தலைவி. இன்று வந்த விருந்தினருக்கு விருந்தளிக்க கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்தான் தலைவன்.
- இளையான்குடி மாறநாயனார் தன் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து விருந்து படைத்ததைப் பெரிய புராணம் மூலம் அறியலாம்.
Question 2.
உற்றாரோடு நின்ற விருந்து குறித்து எழுதுக.
Answer:
- • சங்க காலத்தில் அரசனாயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
- கால மாற்றத்தினால் புதியவர்களை வீட்டிற்குள் அழைத்து உணவளிப்பது குறைந்தது.
- விருந்து புரப்பது குறைந்ததால் நாயக்கர் மராத்தியர் காலத்தில் மிகுதியான சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டன.
- புதியவர்களைவிருந்தினராய் ஏற்பது குறைந்து ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாய் ஏற்ற னர்.
- படிப்படியாக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
Question 3.
விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
Question 4.
மினசோட்டா ‘வாழையிலை விருந்து விழா’ பற்றி எழுதுக.
Answer:
- அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
- தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு விருந்து வைக்கின்றனர்.
- முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
- அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.
Question 5.
வாழை இலை விருந்து, ‘உணவு பரிமாறும் முறை’ குறித்து எழுது.
Answer:
- தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
- உண்பவரின் இடப்பக்கம் வாழையிலையின் குறுகிய பகுதியும், வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும்.
- இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவைகளையும், சிறிய உணவு வகைகளையும் வைத்தனர்.
- இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான உணவு வகைகளை வைப்பர். நடுவில் சோறு வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவர்.
பரிவுடன் பரிமாற்றம் :
விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறும் வழக்கத்தை நம் முன்னோர்கள் செய்தனர்.
Question 6.
வாழை இலையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
Answer:
- வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
- வாழை இலை ஒரு கிருமிநாசினி. அது உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
- வாழை இலையில் தொடர்ந்து உண்பவர்களுக்கு நோய் தாக்குவதில்லை.
தோல் பளபளப்பாகும்; பித்தம் தணிக்கும். - வயிற்றுப் புண் ஆற்றும்; பசியைத் தூண்டும்.
Question 7.
காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.
Answer:
- புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலை இக்காலத்தில் இல்லை.
- அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை
- திருமணம், வளைகாப்பு போன்ற இல்லவிழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.
நெடுவினா
Question 1.
விருந்தோம்பல் பண்பாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது) விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
விருந்து போற்றும் திருக்குறள்:
திருவள்ளுவர் விருந்தோம்பல்’ என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கின்றார். முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ‘மோப்பக்குழையும் அனிச்சம் ….’ என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.
தமிழர் மரபு ‘விருந்தோம்பல்’:
கோவலன் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி கண்ணகி வருந்துகின்றாள் என்பது மூலம் விருந்து தமிழர் மரபு என்கிறார் இளங்கோவடிகள். கம்பரும் செயங்கொண்டாரும் விருந்தைத் தமிழர் மரபாகப் போற்றினர்.
விருந்தறம்:
அமிழ்தமே கிடைத்தாலும் தமிழர் தனித்து உண்ணமாட்டார் என்பதைப் புறநானூறு கூறுகின்றது. விருந்தினர் நடு இரவில் வந்தாலும் இன்முகத்துடன் தமிழர் வரவேற்பர் என்கிறது நற்றிணை. பழைய வாளும் யாழும் பணையம் வைத்து விருந்து போற்றப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்கிறார் ஔவையார். வாழை இலையில் விருந்து படைப்பதைத் தமிழர் அவசியமாகக் கொண்டிருந்தனர்.
முடிவுரை:
காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பாக விளங்கும் விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.
Question 2.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
வீட்டில் திண்ணை :
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். ஆனால் இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை . இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
விருந்தினரைப் பேணுதல்:
திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்ல விழா நாட்களில் அப்பகுதி வாழ் மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
காலப் போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே’ செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.
தமிழர் பண்பாட்டில் ஈகை:
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
‘பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே’
– கம்பராமாயணம், 1:2:36.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. வள்ளல்கள் பலரும் மிகுந்த ஈகைக்குணத்துடன் விளங்கியதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.
பசித்தவருக்கு உணவிடல்:
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
‘பலர்புகு நாவில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ!’
– என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன.
மணிமேகலை பசிப்பிணியைப் போக்க மேற்கொண்ட முயற்சியிலும்’, இராமலிங்க அடிகள் ‘வடலூரில் அணையா அடுப்பை ஏற்படுத்தி பெரும் உதவி புரிந்தமை’ இன்னும் தொடர்வதை பசிப்பிணியை நீக்குவதற்கான செயல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். இன்றைய நிலையில் பல்வேறு திருக்கோயில்களில் அன்னதானம் வழங்குவதைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
விருந்தினர் அன்றும் இன்றும்:
சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
நிறைவுரை:
பண்டைத்தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல்பண்பாடு செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் பல்வேறு முறைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பான விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.