Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 3 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
TN State Board 12th Tamil Model Question Paper 3
நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். - வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
- வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)
Question 1.
‘காவியதர்சம்’ என்ற இலக்கண நூல்……………………மொழியில் எழுதப்பட்டது.
(அ) தமிழ்
(ஆ) வடமொழி
(இ) கிரந்தம்
(ஈ) ஷிப்ரூ
Answer:
(ஆ) வடமொழி
Question 2.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் சதுர மைல்கள் உருகிய பகுதி…………………….
(அ) ஆர்டிக்
(ஆ) அண்டார்டிக்
(இ) பசுபிக்
(ஈ) அட்லாண்டிக்
Answer:
(அ) ஆர்டிக்
Question 3.
‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ) பிரிந்து வாழ்தல்
(ஆ) சமுதாயம்
(இ) தம்மனை
(ஈ) கூடிவாழ்தல்
Answer:
(ஈ) கூடிவாழ்தல்
Question 4.
வானரத் தலைவன்……………………
(அ) அனுமன்
(ஆ) சுக்ரீவன்
(இ) சவரி
(ஈ) சடாயு
Answer:
(ஆ) சுக்ரீவன்
Question 5.
தமிழக அரசு 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை நிறுவிய இடம்……………………
(அ) நெல்லை
(ஆ) கன்னியாகுமரி
(இ) கோவை
(ஈ) தில்லை
Answer:
(ஆ) கன்னியாகுமரி
Question 6.
வாதம் புரிதலை கொடிகட்டியிருப்பரென்று கூறிய நூல்……………………
(அ) மதுரைக்காஞ்சி
(ஆ) நெடுநல்வாடை
(இ) முதுமொழிக்காஞ்சி
(ஈ) பட்டினப்பாலை
Answer:
(அ) மதுரைக்காஞ்சி
Question 7.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமிருந்து உவமைக் கவிஞர் சுரதா பெற்ற விருது…………………………….
(அ) கலைமணி
(ஆ) கலைமாமணி
(இ) இராசராசன்
(ஈ) பாரதி
Answer:
(இ) இராசராசன்
Question 8.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு உருவான பாவகை…………………………… ஆகும்.
(அ) வெண்பா
(ஆ) அகவற்பா
(இ) வஞ்சிப்பா
(ஈ) கலிப்பா
Answer:
(அ) வெண்பா
Question 9.
வள்ளல் பச்சையப்பர் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல்………… ஆகும்.
(ஆ) மல்லியர்பா
(ஆ) மவுனியர்பா
(இ) கொற்கைப்பா
(ஈ) மாவலிபுரச்செலவு
Answer:
(ஈ) மாவலிபுரச்செலவு
Question 10.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
கூற்று : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Answer:
(ஈ) கூற்று சரி, காரணம் சரி
Question 11.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாண அரசின் முதல் தலைவர்…………………… ஆவார்.
(அ) தலாமி
(ஆ) இராஜாஜி
(இ) எலியேல்
(ஈ) ஹிட்லர்
Answer:
(இ) எலியேல்
Question 12.
குறிஞ்சித் திணை பாடிப்புகழ் பெற்றவர்………… ஆவார்.
(அ) கபிலர்
(ஆ) பரணர்
(இ) பேயனார்
(ஈ) அம்மூவனார்
Answer:
(அ) கபிலர்
Question 13.
மாதவி தனது நாட்டியத் திறமைக்காகப் பெற்ற பட்டம்………………………
(அ) ஆடலரிசி
(ஆ) தலைக்கோல்
(இ) நாட்டியப்பேரொளி
(ஈ) நாட்டியச் செங்கோல்
Answer:
(ஆ) தலைக்கோல்
Question 14.
உவகை என்பதன் பொருள் …………………………..
(அ) சினம்
(ஆ) பொறாமை
(இ) சூது
(ஈ) மகிழ்ச்சி
Answer:
(ஈ) மகிழ்ச்சி
பகுதி – II
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]
பிரிவு – 1
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 15.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answer:
- முரண் என்பது பாடலில் அமைந்துள்ள எதிர்ச் சொற்களைக் குறிக்கின்றது.
- பெருங்கடல், சிறுகுடி இவையே, இப்பாடலில் அமைந்துள்ள முரண் நயம் ஆகும்.
- பெரிய கடல், சிறிய குடி என்பதால் பெரிய X சிறிய என்பது முரண் ஆகும்.
Question 16.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:
தான் அரசர்க்குப் பழமையான நட்புடையவராய் உள்ளோம் எனக் கருதி தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமை கேட்டினைத் தரும்.
Question 17.
மஸ்னவி என்றால் என்ன?
Answer:
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூலே ‘மஸ்னவி’ ஆகும். இந்த மஸ்னவி படைப்பில் 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு ஆகும்.
Question 18.
எச். ஏ. கிருட்டிணனார் எழுதிய பிற நூல்கள் யாவை?
Answer:
- இரட்சணிய யாத்திரிகம்
- போற்றித் திரு அகவல்
- இரட்சணிய மனோகரம்
பிரிவு – 2
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
Question 19.
‘விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
Answer:
- பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றி கூறுகிறார்.
- தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப் பணியை உயிர்ப்பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் எனக் கூறுகிறார்.
Question 20.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:
- புள்ளி
- கால் .
- கொம்பு .
- விலங்கு
முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.
Question 21.
நடை என்னும் சொல்லை தொல்காப்பியம் எவ்வாறு கையாண்டுள்ளது?
Answer:
‘நடைபெற்றியலும்’ என்றும் ‘நடைநவின்றொழுகும்’ என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது. மேலும்,
ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலி
என்றும் சொல்லுகிறது; நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு இங்கு இடம்பெறுகின்றது.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஓடுமின்
(ஆ) அணிகின்றேன்
Answer:
(அ) ஓடுமின் = ஓடு + மின்
ஓடு – பகுதி
மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
(ஆ) அணிகின்றேன் = அணி + கின்று + ஏன்
அணி – பகுதி கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
(அ) உழாஅது
(ஆ) உலகு
Answer:
(அ) உழாஅது – செய்யுளிசை அளபெடை
(ஆ) உலகு – இடவாகுபெயர்
Question 24.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) வானமெல்லாம்
(ஆ) செந்தமிழே
Answer:
(அ) வானம் + எல்லாம் – வானமெல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
(ஆ) செம்மை + தமிழே – செந்தமிழே
செம் + தமிழே – செந்தமிழே
விதி : (1) ஈறுபோதல் (2) முன்னின்ற மெய் திரிதல்
Question 25.
ICON என்ற கலைச்சொல்லின் தமிழ் வடிவம் என்ன?
Answer:
உரு
Question 26.
கொச்சை சொற்களை தமிழில் எழுதுக.
Answer:
மெய்யாலுமே நான் கிரஹபிரவேச விழாவுக்குப் போய்கினு இருக்கேன். உண்மையாகவே நான் புதுமனை புகுவிழா நிகழ்விற்குச் சென்று கொண்டு இருக்கிறேன்.
Question 27.
மரபுத் தொடரைச் சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
Answer:
கூழைக்கும்பிடு
கூழைக்கும்பிடு – போலி மரியாதை
தொடர் : இந்த உலகில் பிடிக்காவிட்டாலும் கூட உயர் அதிகாரிகளைக் கண்டவுடன் சிலர் கூழைக்கும்பிடு போடுவர்.
Question 28.
மரபுப்பிழை திருத்துக.
சிங்கத்தின் பிளிறல் கேட்டு நரி குரைத்திட ஆந்தை ஓலமிட்டது.
Answer:
சிங்கத்தின் முழக்கம் கேட்டு நரி ஊளையிட ஆந்தை அலறியது.
Question 29.
விடைக்கேற்ற வினா எழுதுக.
மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் காலத்தில் தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது.
Answer:
யார் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழகக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கண்டது?
Question 30.
பொருள் வேற்றுமை தோன்றும்படியாக ஒரே தொடரில் அமை.
வால் – வாள்
Answer:
குறும்பு செய்த குரங்கின் வாலை, வாள் கொண்டு வெட்டினான்.
பகுதி – III
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28)
பிரிவு – 1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:
- கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது
பற்கள் நடுங்கின. - விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
- பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
Question 32.
அகநானூறு குறிப்பு வரைக.
Answer:
- அகம் + நான்கு + நூறு = அகநானூறு
- அகத்தைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல்.
- பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத்
தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு. - இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
- களிற்றியானைநிரையில் 120 பாடல்களும், மணிமிடை பவளத்தில் 180, பாடல்களும் நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.
Question 33.
‘ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்: எச். ஏ. கிருட்டிணனார் பாடி ‘இரட்சணிய யாத்திரிகம்’ பாடலில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இயேசு பெருமான் அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.
விளக்கம்:
இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம். அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.
Question 34.
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? – குறள் வழி விளக்குக.
Answer:
- தான் எந்த உதவியும் செய்யாமலிருந்த போதிலும் தனக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகமும், விண்ணுலகமும் ஈடாகாத அளவிற்கு உயர்ந்தது.
- உரியகாலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட பெரியதாகும்.
- இதனால் நமக்கு பயன்கிடைக்குமா என்று ஆராயாமல் ஒருவர் நமக்கு செய்யும் உதவி, நன்மை கடலைவிட பெரியதாகும்.
- ஒருவர் தினையளவை உதவி செய்திருந்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதை பனையளவாகக் கொண்டு போற்றுவர். இந்த செயல்களையெல்லாம் விட நன்றி உயர்ந்தது என்று ‘வள்ளுவர் கூறுகிறார்.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 35.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
Answer:
- மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, அவன் ஓய்வு நேரத்தை உருவாக்கத் தொடங்கிய போது உருவானது.
- வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.
- அவனது பொழுது, உணவு தேடுவதிலேயே கழிந்தது.
- விரைவாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக் கூடிய கருவிகளைச் செய்தபோது அவனால் ஓய்வு நேரத்தை உருவாக்க முடிந்தது.
- அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்கைக் கூறுகளை உண்டாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
- இன்று கூட அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றைய பணிகளை மன அடுக்குகளில் வகித்துக்கொள்ள வேண்டும்.
- சிறந்த நிருவாகியாக இருந்தால் கூட உரிய நேரத்தைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது.
- பல நேரங்களில் போர்களில் குறைவான படைவீரர்களுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் :
இதனைத் திருவள்ளுவர், ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுப்படுத்துகிறார்.
Question 36.
சென்னை நீர் நிலைகளை குறிப்பிடுக.
Answer:
சென்னை நீர் நிலைகளாவன:
- இலண்டன் நகர் என்றால் தேம்ஸ் நதி.
- வாஷிங்டன் நகர் என்றால் போடமாக் நதி.
- சென்னை, வட சென்னைக்குக் கொற்றலையாறு. மத்திய சென்னைக்குக் கூவம். தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய்.
- காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
- மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்.
- பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும் ஆறுகள் கடலில் சென்று சேரும்.
Question 37.
நம் தமிழ் பரம்பரையின் உறவுப்பெயர்களை எழுதுக.
Answer:
தமிழர் பரம்பரை:
பரன் – பறை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தந்தை – தாய்
நாம் :
மகன் – மகள்
பெயரன் – பெயர்த்தி
கொள்ளுப் பெயரன் – கொள்ளுப் பெயர்த்தி
எள்ளுப் பெயரன் – எள்ளுப் பெயர்த்தி
Question 38.
ஒரு நாட்டினுடைய வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:
- • நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும்.
- ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன.
- பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். சான்றுகளை ஆய்வு நோக்கில் தந்து வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் சான்றோர்களின் ஆய்வு ஆளுமை அறியத்தக்கது.
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
Question 39.
நெய்தல் திணை அல்லது இயன்மொழித்துறையை விளக்குக.
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்
கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்
உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’
சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.
துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது
விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.
(அல்லது)
இயன்மொழித் துறை
Answer:
துறை விளக்கம்:
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும். ஒருவனின் இயல்பைப் புகழ்ந்துக் கூறி வாழ்த்துவது இத்துறையின் உயிர்ப்பாகும்.
(சான்று) வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
துறை பொருத்தம்:
வரையறையின்றி மழை பல்வேறு இடங்களிலும் பொழிவது போல இரவலர்க்கு ஆராய்ந்து பாராமல் மழை போல் வாரி வழங்குவான் என்று பரணர் பேகனின் இயல்பைப் பாடலில் புகழ்வதால் இப்பாடல் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையாகும்.
குறிப்பு:
பேகனின் வள்ளல் தன்மையின் இயல்பைப் பாடப்பட்டது குதிரைகளுக்கு மிகுந்த புல்லினை ஊட்டி பெருந்தேரினைச் விரைவாகச் செலுத்துவாயாக என்று கூறினான்.
Question 40.
நிரல்நிறையணி (அல்லது) தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
அணி விளக்கம்:
சில சொற்களை வரிசைப்படுத்தி, அச்சொற்களுடன் தொடர்புள்ளவற்றையும் முறையாக வரிசைப்படுத்தி அதன்படி பொருள் கொள்ள வைப்பதே ‘நிரல்நிறையணி’யாகும்.
(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Answer:
விளக்கம்:
மேற்காணும் குறளில், அன்பும், அறனும், முதலடியில் அமைந்துள்ளன. அச்சொற்களுக்கு முறையாகப் பொருந்தும்படி, பண்பும், பயனும், இரண்டாவது அடியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அன்பே பண்பாகவும், அறனே பயனாகவும் இல்லறம் அமைய வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இங்ஙனம் அன்பிற்குப் பண்பும், அறத்திற்குப் பயனும் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
(நிரல் – வரிசை ; நிறை – நிறுத்துதல், நிரல் நிறை வரிசையாக நிறுத்துதல்)
(அல்லது)
தற்குறிப்பேற்ற அணி:
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுதல் ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும். (தன்+ குறிப்பு + ஏற்றம் – தற்குறிப்பேற்றம்)
(எ.கா.) மையறு மலரின் நீங்கியான் செய்மா தவத்தின் வந்து
செய்யவளிருந்தாள் என்று செருமணிக் கொடிகள்
என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா
விளக்கம்:
மிதிலை நகரம் தன்னிடம் திருமகள் வளர்ந்து வருவதைக் குறிப்பாகச் சொல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள இராமனை விரைந்து வருக’ என்று அழைப்பது போல தன் கொடிகளாகிய கைகளை நீட்டி அழைத்தது என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.
இயல்பாகக் கொடி அசைவதை – இராமனை அழைக்கவே அவ்வாறு அசைந்தது என்று தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறியதால், இது ‘தற்குறிப்பேற்ற அணி’யாகும்.
Question 41.
பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.
Answer:
ஆழம் தெரியாமல் காலை விடாதே அல்லது மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழி விளக்கம்:
எந்தச்செயலைச் செய்வதற்கு முன்பும் அதன் விளைவை அறிந்து செயலைச் செய்ய வேண்டும்.
வாழ்க்கை நிகழ்வு :
ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியமாட்டார்கள். ஆனால் அதில் ஒருவன் மட்டும் எந்தச் செயலை எடுத்தாலும் அதை உடனே செய்து விடுவான். அதனால் என்ன விளைவு வரும் என்பதை யோசிக்காமல் செய்து விடுவான். அவன் நண்பன் அதில் இருந்து காப்பதுமே வேலையாக இருக்கும். எப்போதும் அவன் நண்பன் கூறுவான் நாம் எந்த செயலை எடுத்தாலும் அதன் ஆழம் தெரிந்து செயலைத் தொடங்க வேண்டும் என்று கூறுவான்.
(அல்லது)
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
Answer:
பழமொழி விளக்கம்:
வெளிப்புறத் தோற்றம் கண்டு எதையும் உண்மை என நினைத்தல் கூடாது.
வாழ்க்கை நிகழ்வு:
என் நண்பர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணம் செய்தார். அப்போது தாம்பரத்தில் ஒரு நபர் ஏறி என் நண்பரின் அருகில் அமர்ந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் நல்லவராய்த் தெரிந்தார். பேண்ட், சர்ட் என மிகவும் மிடுக்காகத் தோற்றமளித்தார். கையில் மிகப்பெரிய பெட்டியும் வைத்திருந்தார். அவர் என் நண்பரிடம் மிக மெதுவாகப் பேச ஆரம்பித்தார். என் நண்பரும் பேசினார், பின் இருவரும் இரவு உணவு உண்டனர்.
பின் சென்னையைத் தாண்டிய பிறகு, என் நண்பருக்கு அவர் பிஸ்கட் தந்தார். என் நண்பர் அது மயக்க பிஸ்கட்டாக இருக்கும் என மறுத்தார். பின் அந்த நபர் சிறிது நேரத்தில் ஒரு நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ஏதோ பேசினார்.
பின் அடுத்த இரயில் நிலையம் வந்தது. அப்போது வேறு ஒரு நபர் காபி விற்றார். உடனே அந்த நபர் என் நண்பரிடம் காபி குடிக்கலாமே எனக் கூறினார். பின் இருவரும் காபி குடித்தனர். பின் நண்பர் மயங்கினார். காலையில் விழித்துப் பார்த்தபோது அவரின் பணப்பையைக் காணவில்லை. உடனே காவலரிடம் புகார் செய்தார். காவலர் அந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைத்திருந்தனர். அப்போதுதான் என் நண்பருக்கு அந்த காபி விற்றவரும் இவரின் கூட்டாளி எனத் தெரிந்தது. பின் காவலரிடம் தன் பணத்தைப் பெற்றார்.
Question 42.
தமிழாக்கம் தருக.
1. A young calf knows not fear.
2. Forgive and forget.
3. Slow and steady win the race.
4. All his geese are swans.
Answer:
- இளங்கன்று பயமறியாது.
- மறப்போம், மன்னிப்போம்.
- நிதானம் பிரதானம்.
- காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
மனித நேயம் (அல்லது) தமிழர் திருநாள்
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]
Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:
- “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
- பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
- முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின. விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
- மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
- பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என்று நெடுநல்வாடையில் நக்கீரர் வருணனை செய்கிறார்.
(அல்லது)
(ஆ) நகை, அழுகை, இளிவரல், பெருமிதம் முதலான மெய்ப்பாடுகளைச் சான்றுடன்
விளக்குக.
Answer:
நகை :
(பாடிய பாணனின் குரலை எள்ளி நகையாடிய தலைவியின் கூற்று இது)
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார். தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!
பாடலின் பொருள் :
“புகழ்மிக்க தலைவனின் புகழ்பாடுவோனே! நீ எங்கள் வீட்டின் முன் இரவு முழுவதும் பாடினாய். அதைக்கேட்டு என் தாய், விடியவிடியக் காட்டில் அழும் பேய் என்றாள்; பிறர், நரி ஊளையிட்டது என்றனர்; தோழியோ, நாய் குரைத்தது என்றாள்; இல்லை நீ என்றேன் நான்”.
அழுகை:)
(தலைவன் காட்டில் புலியுடன் போராடி இறந்துபட, தலைவி துயரில் கூறுவது)
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பு
எடுக்கவல்லேன் என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
பாடலின் பொருள்:
போரில் இறந்துபட்ட தலைவனின் உடலைப் பார்த்து தலைவி, ஐயோ எனக் கதறினால், காட்டில் உள்ள புலி வந்துவிடுமோ என அஞ்சுகின்றேன். தூக்கி எடுத்துச் செல்லலாம் என்றால் அகன்ற மார்பு கொண்ட உன்னைத் தூக்கவும் இயலாது. இவ்வாறு துன்புறும் வண்ணம் செய்ததே கூற்றம். அக்கூற்றம் என்னைப்போல் துன்புறட்டும்.
இளிவரல் :
(சேரன் கணைக்காலிரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்திக் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்துத் தனக்கேற்பட்ட சிறுமையை எண்ணிப் பாடியது)
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே
பாடலின் பொருள்:
”நாயைக் கட்டுவது போலச் சங்கிலியினால் கட்டிவைத்து, என்னைத் துன்புறுத்திச் சிறையிலிட்டனர். அப்படிச் சிறையிலிட்டவரின் உதவியினால் வந்த தண்ணீரை மனவலிமையின்றி இரந்து உண்ணுபவரை இவ்வுலகில் அரசர் எனப் போற்றுவார்களா?”
பெருமிதம்:
(பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தைக் குறிப்பிடுதல்)
உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய் –
எறிசுடர்வேல்
தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்தே
நின்னோடு
பாங்கலா மன்னர் படை
பாடலின் பொருள்:
எறிதற்குரிய ஒளிமிக்க வேலினையும் தேன்நிறைந்த பூமாலையினையும் உடைய தேர்வேந்தனே! வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என்முன் அப்பெரும்படை சிறுவிளக்கின் முன் இருள் ஓடுவதுபோல ஓடும்.
Question 45.
(அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Amswer:
- குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற
அமைப்புவரை விரிவு பெறுகிறது. - குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச்
செய்ததில்லை.
குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
வாழிடம் :
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் தன்மனை எனவும் வழங்கப்பெற்றுள்ளன.
மணந்தகம் :
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.
தாய்வழிக் குடும்பம் :
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
முதலான தொடர்களில் “இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.
சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.
தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.
தனிக்குடும்பம்:
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல் ” மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.
விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாகக் கட்டமைக்கப்படுகிறது.
(அல்லது)
(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
- உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
- ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
- தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
- நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”
- நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு
செய்பவன். அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான். - டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
- அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
- ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன்
வருந்தவில்லை . - தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
- அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
- அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
- ‘டைமன்’ பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஔவையார் நல்வழியில்
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”
என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
Question 46.
(அ) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
Answer:
- மருத்துவமனையின் உள்ளிருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.
- தாயின் தோளில் கோழிக்குஞ்சாய் ஒரு பிஞ்சு ஒடுங்கி இருக்க அவள் கை அதைச் சுற்றிப்
படர்ந்து இருந்தது பார்க்கவும் நினைக்கவும் மிகவும் பாந்தமாக இருந்தது. - நெடுமூச்சு தவிர வேறு ஏதும் இல்லாத குழந்தை மீதான தன் கையை அழுத்தி இருத்திக் கொண்டார். இந்த அரவணைப்பு இதற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு…? தனக்குப் பிறகு……?
- பிள்ளையைப் பரிசோதித்த டாக்டர் நெஞ்சில் சளி கட்டி இருப்பதால் காய்ச்சல்…… பயப்படத் தேவையில்லை, பக்குவமாய்ப் பார்த்துக்கொண்டால் இரு தினங்களில் தணிந்துவிடும் என மருந்து எழுதிக் கொடுத்தார்.
- உங்க கை இப்படி நடுங்குது பெரியவரே…. வீட்ல வேற யாரும் இல்லையா? ஊசி போட்ட வலியால் வீறிட்ட குழந்தையை லாவகமாய் அணைத்துச் சமாதானப்படுத்தி அவ்வாறு கேட்ட வெள்ளையுடை தேவதைக்கு நன்றிச் சிரிப்பை மட்டுமே பதிலாக விட்டு வெளியே வந்தார்.
- தவித்த தொண்டையைத் தேநீரால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழக்கமாய் வாங்கும் மருந்துக் கடை நோக்கிப் பயணப்பட்டார். “வாங்கய்யா உட்காருங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லையா? இப்படிக் கொடுங்க….” கைச்சுமை மட்டும் இடம் மாறியது.
- ” மூணு நாளா சிரமப்படுது பாவம். டாக்டர் ஊசி போட்டு மருந்து எழுதிக் குடுத்திருக்கார். சரியாயிடும். இப்போ உன்கிட்ட மருந்து வாங்க மட்டும் வரல பாபு” …. சீட்டை நீட்டியபடி அமைதியாய்ச் சொன்னவரை யோசனையுடன் பார்த்தான் பாபு.
- “ரொம்ப நாளாகவே சொல்லிக்கிட்டு இருக்கே, இப்ப எனக்கும் சரியாய்த்தான் படறது. இதுக்காக இன்னும் நிறைய நாள் உசிரோட இருக்கணும்னு எனக்கும் ஆசைதான்.
- நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கணுமே? சாவோட மல்லுக்கு நிக்கிற வயசா? அப்ப இதனோட கதி? சரி… நாளைக்கு அவர்களைக் கூட்டிட்டு வந்துடறயா பாபு.” ”ஐயா’………
- “ஆமாம்பா நெசமாத்தான் சொல்றேன். அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது? பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது பாபு.
- இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அனாதையா விட்டுட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்…? அதான். அதுவும் இல்லாம அவங்க உனக்கு நல்லாத் தெரிஞ்சவங்க அதனால பத்திரமான இடத்துக்குத் தான் போய்ச் சேருறது புள்ளையன்னு நிம்மதி. அவங்கள உடனே வரச் சொல்லிடு. ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.”
- வினாடி தாமதித்தாலும் மனம் மாறிவிடுமோ என்பது போல் மருத்தும் குழந்தையுமாக விடுவிடுவென நடந்தார்.
- இரவெல்லாம் உறக்கமின்றிப் புரண்டு……… எல்லாம் இதோட நல்லதுக்குதானே எனத் திரும்பத் திரும்ப நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டார்.
- பாபுவுடன் வந்த அவர்களைப் பார்த்த போது……… பிள்ளைப் பாக்கியம், ஏக்கம்…… தவிப்…….. எதிர்பார்ப்பு அத்தனையும் அம்முகங்களில் உணர்ந்த போது பிள்ளையின் பாதுகாப்புக் குறித்த நம்பிக்கை வலுத்தது.
- நெடுநாள் தயக்கத்துக்குப் பின்னான தன் முடிவு குறித்து இனி இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்ற அளவில் உறுதி கூடியது.
- அந்நேரத்திற்கு நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே எனும் உதிரத்தை உறைய வைக்கும் உறுத்தல் மட்டுமே. விழி நீரைப் பிடிவாதமாய் வந்த வழி அனுப்பி வைத்தார்.
- “உங்களுக்குக் கவலையே வேணாம் ஐயா. இப்படிச் சொல்றது கூட சரியில்லைதான். நல்லாப் பார்த்துக்கிறோம்னு பெத்தவங்க யாராவது உறுதிமொழி அளிக்கிறார்களா என்……..” அப்பா’ என அழைக்கப்பட இருப்பவன் ஓரிரு கணம் போல் தயங்கிப் பிறகு தொடர்ந்தான்.
- “ஐயா, ரொம்ப பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க. நன்றி சொல்றதுக்குப் பதிலா உங்களிடமே இன்னுமொரு உதவி கேட்கின்றோம். குழந்தையைப் பிரிந்து சிரமப்படாமல் நீங்களும் எங்களோடு வந்துடுங்கய்யா.
- எங்க மூணு பேருக்குமே ஒரு பெரிய துணையா பலமா இருக்கும். நீங்க எதுக்கும் தயாங்காதீங்க. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் முடிந்த அளவில் உதவியாய் இருப்போம். சரின்னு சொல்லுங்க ஐயா”.
- இறைஞ்சும் தன்மையில் கேட்கப்பட… அதிர்ந்து போனார் ஆறுமுகம். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு எளிமையாய் ….. தனக்கு எந்தச் சங்கடமும் கூடாதென மிகவும் பக்குவமாய் இவன்……. மலைபோன்ற அத்தனை பிரச்சனைகளும் எப்படி இப்படி ஒரே நாளில் தீர்வு கண்டு குழந்தையுடன் ……….. தன்னையும் சுவீகரித்து ………..
- ”பாபு……. இப்போதைக்கு எனக்குச் சாவு வராதுனு தோணுதுப்பா……..” கண்ணீரை இப்போது சுதந்திரமாய் வெளியனுப்பியபடி கைகூப்பினார் முதியவர்.
(அல்லது)
(ஆ) பாதுகாப்பாய் ஒரு பயணம் விழிப்புணர்வு எழுத்தோவியத்தை நாடக வடிவில் தருக.
காட்சி – 1
களம் : அரசுப் பேருந்து
பங்கேற்போர் : ஓட்டுநர், நடத்துநர், பயணி 1, பயணி 2, மக்களில் ஒருவர்
(திங்கட்கிழமை காலை 8 மணி – மாணவர்களும், பணிக்கு செல்வோரும் 8 மணிப் பேருந்தை கண்டவுடன் முண்டியடித்தபடி பேருந்தில் ஏறுகின்றனர். பல மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்)
ஓட்டுநர்: யாருப்பா அது? ஸ்கூல் பசங்களா? படிக்கட்டிலேயே நிக்காம, பஸ்ஸீக்கு உள்ளே வாங்க தம்பி ஏறி உள்ளே வாங்க….. இல்லேன்னா பஸ்ஸை நிறுத்திடுவே.
நடத்துநர்: தம்பி …. உள்ளே வாங்கப்பா. படியில் பயணம் – நொடியில் மரணம் … என்று நீங்க படிச்சதில்லையா? படியை விட்டு மேலே ஏறுங்க தம்பி.
பயணி 1: தம்பி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றாங்க. உள்ளே வாங்க தம்பி. விபத்தை விலை குடுத்து வாங்காதீங்க படியைவிட்டு மேல ஏறி பஸ்ஸுக்குள்ள வாங்க. (படிக்கட்டில் பயணித்தவர்கள் உள்ளே வந்தனர்… 15 நிமிடப் பயணத்திற்குப்பின் வண்டி நின்றது. அந்த பிரதான சாலையில், போக்குவரத்து திடீரென முடங்கியது. எதிர்த்திசையிலிருந்து பலர் பதட்டமாக வந்து கொண்டிருந்தனர்)
பயணி 1: (எதிர்த்திசையிலிருந்து வந்தவரிடம்) என்னாச்சு? தீடீர்னு போக்குவரத்து முடக்கம்? உங்களுக்குத் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்க.
எதிரே வந்தவர்: பள்ளிக் கூடத்துப் பசங்க 3 பேரு ஒரே இருசக்கர வாகனத்துல வேகமா வந்து எதிரே வந்த லாரி மேல மோதிட்டாங்க. கடும் விபத்து – கடுமையான காயம் – இப்போதான் ஆம்புன்சுல அள்ளிட்டுப் போறாங்க.
நடத்துநர்: அடிக்கடி இப்படித்தாங்க நடக்குது.
பயணி 1 : சின்னப் பசங்க …. வண்டி ஓட்டுறதே தப்பு. அதிலயும் மூணு பேரா?
பயணி 2 : 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க முடியாது. உரிமம் இல்லாம வண்டி ஓட்டுறது சட்டப்படிக் குற்றம்னு பசங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா அவங்க பெற்றோர்க்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். \
பயணி 3 : அப்படி போற பசங்க சாதாரணமாவா போறாங்க… அடுத்தவங்க பார்க்கணும்னே வேகமா வண்டி ஓட்டுறாங்க. (காவல் துறையினர் போக்குவரத்தைச் சீர்செய்கின்றனர். மீண்டும் வாகனங்கள் நகரத் தொடங்கின)
காட்சி – 2
(1 மணி நேர கால தாமதத்திற்குப் பின் 15 மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தனர். தாமதமாக வந்ததால் அனுமதி பெற்றிட தலைமையாசிரியை அலுவலகத்திற்குள் நுழைந்தனர்)
மாணவர்கள் : அம்மா, வணக்கம்…. நாங்கள் உள்ளே வரலாமா?
தலைமையாசிரியை : வாருங்கள் மாணவர்களே…. ஏன் காலதாமதம்? பள்ளிக்குத் தாமதமாக வருவது தவறு என்று உங்களுக்குத் தோணவில்லையா?
மாணவர்கள் : அம்மா… மன்னியுங்கள். வரும் வழியில் மெயின் ரோட்டில் சாலை விபத்து 3 மாணவர்கள் டூவீலரில் வந்து லாரி மீது மோதிவிட்டனர். படுகாயம் அடைந்துள்ளனர். ஆம்புலன்சு வந்து அவர்களை ஏற்றிச் சென்றுவிட்டது.
தலைமையாசிரியை : சரி சாமி … நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லலாம். நமது மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியம். விரைந்து விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வேன் (என்று தனக்கு பேசிக் கொண்டார்)
காட்சி – 3
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
களம்: பள்ளி கலையரங்கம்.
(வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிக்கு வருகிறார். பள்ளித் தலைமையாசிரியர் வரவேற்கிறார் சாலைப்பாதுகாப்பு பணி…. அவர் திறந்து வைக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்குகிறது.)
தலைமையாசிரியர் வரவேற்றுப் பேசுக்கிறார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிறப்புரை ஆற்ற வருகிறார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் : அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக சாலைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த எம்மை அழைத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி அன்பு மாணவச் செல்வங்களே. தீதும் நன்றும் பிறர் வருவதில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 55 இலட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 21 கோடிக்கும் மேலான வாகனப் போக்குவரத்து உள்ளன. ஆண்டிற்கு 5 லட்சம் விபத்துகளில் 11/2 லட்சம் பேர் உயிரை இழக்கின்றனர். பல லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். தமிழ் நாட்டில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. 18 வயது நிரப்பியவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால்தான் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும். பள்ளி மாணவர்கள் மோட்டார் வண்டிகளை ஓட்டுவது சட்டப்படிக் குற்றமாகும். அவ்வாறு குழந்தைகள் தவறு செய்தால், அதனை அனுமதித்த பெற்றோர்க்கு தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாலைகளில் விளையாடுவது, திடீரென சாலையைக் கடப்பது, வாகனம் ஓட்டுவது ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்பதற்கு முன்பே கீழே குதிப்பது, படிக்கட்டில் பயணம் செல்வது போன்ற செயல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். விலை மதிப்பில்லா உயிருக்கு முதன்மை தந்து மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலை விதிகளை அறிய வேண்டும். சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான உறுதி மொழிகளை மேற்கொண்டால். நன்றாக இருக்கும். விபத்து இல்லாத தமிழகம் உருவாக மாணவ மாணவி ஒத்துழைக்க வேண்டும். நன்றி.
மாணவர்கள் : சாலை விதிகளை மதிப்போம். சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்போம். உரிமம் பெறும் வரை வாகனங்களை ஓட்டமாட்டோம். பெரியவர்கள் சாலையைக் கடக்க உதவுவோம். விபத்தில்லா தமிழகம் உருவாக்கப் பாடுபாடுவோம். (என்று உறுதி கூறினர்)
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறை வேறியது
பகுதி – V
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]
Question 47.
(அ) ‘காய்நெல்’ என்று துவங்கும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை எழுதுக.
Answer:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; (- பிசிராந்தையார் )
(ஆ) ‘தலை’ என்று முடியும் குறளை எழுது.[1 x 2 = 2]
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ( – திருவள்ளுவர்)