Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
(குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
- வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். - வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)
(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 × 1 = 15]
(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)
Question 1.
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் யார்?
(அ) பாரதிதாசன்
(ஆ) பெருஞ்சித்திரனார்
(இ) சச்சிதானந்தன்
(ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
(இ) சச்சிதானந்தன்
Question 2.
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி …………..
(அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
(ஆ) காப்பியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
(இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
(ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
Answer:
(அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
Question 3.
‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக எழுது எழுது என வந்தால்…………..
(அ) வினைத்தொடர்
(ஆ) எச்சத் தொடர்
(இ. அடுக்குத்தொடர்
(ஈ) இரட்டைக்கிளவி
Answer:
(இ. அடுக்குத்தொடர்
Question 4.
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை…………..
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து
Question 5.
குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.
(அ) கந்தர் கலிவெண்பா
(ஆ) நீதிநெறிவிளக்கம்
(இ) மதுரைக் கலம்பகம்
(ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Answer:
(ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Question 6.
“உனதருளே பார்பன் அடியேனே ” யார் யாரிடம் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
Question 7.
முக்காலத்திற்கும் பொருந்துமாறு அமைவது………………
(அ) பண்புத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) வேற்றுமைத்தொகை
(ஈ) அன்மொழித்தொகை
Answer:
(ஆ) வினைத்தொகை
Question 8.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசன் நூல் …………..
(அ) மாங்கனி
(ஆ) இயேசு காவியம்
(இ) சேரமான் காதலி
(ஈ) சிவகங்கைச் சீமை
Answer:
(இ) சேரமான் காதலி
Question 9.
பால் என்பது …………..ன் உட்பிரிவாகும்.
(அ) ஒருமை
(ஆ) பன்மை
(இ) சத்துணவு
(ஈ) திணை
Answer:
(ஈ) திணை
Question 10.
‘கத்தும் குயிலோசை’ என்பது …………..
அ) பால் வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) திணை வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
Answer:
(ஆ) மரபு வழுவமைதி
Question 11.
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது……………
(அ) புத்தூர்
(ஆ) மூதூர்
(இ) சிற்றூர்
(ஈ) பேரூர்
Answer:
(இ) சிற்றூர்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் என்னே
Question 12.
பாடலடியில் குறிப்பிடப்படும் மன்ன ன்……………..
(அ) சோழன்
(ஆ) சேரன்
(இ) பாண்டியன்
(ஈ) நன்னன்
Answer:
(ஈ) நன்னன்
Question 13.
மேற்கண்ட பாடலடிகள் இடம் பெற்ற நூல்…………..
(அ) பரிபாடல்
(ஆ) மலைபடுகடாம்
(இ) ஆற்றுப்படை
(ஈ) நீதிவெண்பா
Answer:
(ஆ) மலைபடுகடாம்
Question 14.
வயிரியம் – சொல்லின் பொருள் ………………..
(அ) வைரம்
(ஆ) கூத்தர்
(இ) பாணர்
(ஈ) சோறு
Answer:
(ஆ) கூத்தர்
Question 15.
மேற்கண்ட பாடலில் எதுகையை எழுதுக.
(அ) அலங்கு, அடைந்திருந்த
(ஆ) அலங்கு, சிலம்பு
(இ) வலம்படு, வயிரியம்
(ஈ) நோன்தாள், எய்தி
Answer:
(ஆ) அலங்கு, சிலம்பு
பகுதி – II (மதிப்பெண்கள்: 18)
பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4 × 2 = 8]
Question 16.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:
ஜெயகாந்தன் பெற்ற விருதுகளாவன:
- குடியரசுத் தலைவர் விருது (உன்னைப்போல் ஒருவன் – திரைப்படம்)
- சாகித்திய அகாதெமி விருது – சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
- சோவியத் நாட்டு விருது (இமயத்துக்கு அப்பால்) . ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது
Question 17.
பாண்டிய மன்னன் யாரை அவமதித்ததாக இடைக்காடனார் இறைவனிடம் கூறினார்?
Answer:
- இடைக்காடனார் இறைவனிடம், பாண்டியன் என்னை இகழவில்லை.
- சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான் என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
Question 18.
தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?
Answer:
வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன்ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.
Question 19.
குறிப்பு வரைக – அவையம்.
Answer:
- அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
- அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்கிறது புறநானூறு.
- உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன. - மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது மதுரைக்காஞ்சி.
Question 20.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர்,
மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
(ஆ) இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப் பேரும் ஒருவரும் பெற்றது போல்
ஆட்சி செலுத்தினான் சோழன்.
Answer:
விடை:
(அ) கு.ப.ரா.வின் பன்முகங்கள் யாவை?
(ஆ) சோழனின் ஆட்சி சிறப்பு யாது?
Question 21.
விடும்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
Answer:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 × 2 = 10]
Question 22.
அகராதியில் பொருள் காண்க.
அடவி, அவல், சுவல், செறு
Answer:
விடை:
அடவி – காடு
அவல் – நெல் இடியல் / விளை நிலை
சுவல் – முதுகு தொல்லை
செறு – வயல் / கேர்பம்
Question 23.
பிறமொழிச் சொல்லை தமிழ்ச்சொல்லாக மாற்றுக.
Answer:
கோல்ட்பிஸ்கட் – தங்கக்கட்டி
மிச்சம் – மீதி
ஈக்வல் – சரியான
ரிப்பீட் – மறுமுறை
Question 24.
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
Answer:
- புதுக்கோட்டை – புதுகை
- மயிலாப்பூர் – மயிலை
- கும்பகோணம் – குடந்தை
- உதகமண்டலம் – உதகை
Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
Emblem – சின்னம்
Symbolism – குறியீட்டியல்
Question 26.
அயற்கூற்றுத் தொடர்களை நேர்க்கூற்றாக மாற்றுக.
தாய் மகளைப் பார்த்து மணி அடித்து விட்டதால் பள்ளிக்கு உடனே செல்லும்படிச் சொன்னாள்.
Answer:
தாய் மகளிடம், “மணி அடித்து விட்டது. பள்ளிக்கு உடனே செல்” என்றார்.
Question 27.
பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
ஒரு முறை காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்த போது இரகுபதி இராவக இராஜாராம் என்ற பாடலைப் பாடினேன் என்னைப் பாராட்டிய அண்ணல் மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்
Answer:
ஒரு முறை காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்த போது, ‘இரகுபதி இராகவ இராஜாராம்’ என்ற பாடலைப் பாடினேன். என்னைப் பாராட்டிய அண்ணல், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்.
Question 28.
வருக – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
வருக – வா (வரு) + க
Answer:
வா – பகுதி ‘வரு’ எனக் குறுகியது விகாரம் க – வியங்கோள் வினைமுற்று விகுதி பகுதி – III (மதிப்பெண்கள்: 18)
பிரிவு – 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]
Question 29.
“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம்:
மேற்கண்ட தொடர் மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் மாநகரத் தந்தை செங்கல்வராயன் முன்னிலையில் ம.பொ. சிவஞானம் கூறியது.
பொருள்:
ஆந்திராவின் தலைநகரம் சென்னையாக்க வேண்டும் என்று நீதிபதி வாஞ்சுவின் கருத்தை எதிர்த்து ம.பொ.சி. வாதிட்டார்.
விளக்கம்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் இராஜாஜிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்திய போது, தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் அவர் முன்வந்தார். சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின. இதையொட்டி, ம.பொ.சி மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்போதைய மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்.
Question 30.
தெருக்கூத்து விளக்குக.
Answer:
- நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர், அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
- கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. •
- திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படு கிறது. களத்து மேடுகளில் நிகழ்த்தப்பட்ட தெருக்கூத்து, தெருச்சந்திப்புகளிலும் நிகழ்த்தப்படுகிறது.
- ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
- தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
- அருச்சுனன் தபசு’ என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படும் கூத்தாகும். கூத்துக்கலைஞர், கூத்தைக் கற்றுக்கொடுப்பவர் ஆகியோரின் அடிப்படையிலும் காலம். இடம் போன்றவற்றின் அடிப்படையிலும் கூத்து நிகழ்த்தப்படுவதில் சிறுசிறு மாறுபாடுகள் உள்ளன.
- தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் மனிதர்கள் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு அவர்களின் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும்; பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும். மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும். கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைவடிவ எரிபொருள்களைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என மரத்தைப் பற்றிக் காற்று கூறுகிறது.
(அ) மனிதன் ஒரு மணித்துளிக்கு எத்தனை முறை மூச்சுக்காற்றை விடுவர்?
Answer:
மனிதன் ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 வரை மூச்சுக்காற்றை விடுவர்.
(ஆ) மனிதன் வெளிவிடும் மூச்சுக்காற்றின் பெயர் என்ன?
Answer:
கார்பன் டை ஆக்சைடு
(இ) எந்த எரிபொருளைத் தவிர்க்க வேண்டும்?
Answer:
கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி
பிரிவு – 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 × 3 = 6]
Question 32.
சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க
Answer:
சோலைப்பூங்காற்று:
கோடை காலம் வந்துவிட்டது. மின்விசிறியே உனக்கு இனி ஓய்வே இருக்காதே.
மின்விசிறி :
ஆமாம். இனி எனக்கு ஓய்வே இருக்காது. முன்பெல்லாம் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள் அதனால் சற்று ஓய்வு இருக்கும்.
சோலைப்பூங்காற்று:
ஆமாம் தற்பொழுது அனைவரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகின்றனர். வெளியில் சோலை, வயல் வெளிகளுக்கு வருவது இல்லை. என் காற்றை அவர்கள் விரும்புவதும் இல்லை.
மின்விசிறி:
உன் காற்றே உடலுக்கு நல்லது. தூய்மையானது. அதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Question 33.
நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
Answer:
நவீன கவிதை:
நவீன கவிதையில் பூவினை இறுக்கி முடித்தல் காம்பு அறுந்துவிடும். அதைத் தளரப் பிணைத்தால் தரையில் நழுவும். வாசலில் மரணம் இருப்பது தெரிந்தும் கவலைப்படாமல் சிரிக்கும் அந்தப் பூவைத் தொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
நாட்டுப்புறப்பாடல்:
நாட்டுப்புறப்பாடலில் இறைவனுக்குப் போடப்போகும் பூவைத் தொடுப்பது எப்படிக் கையால் தொடுத்தால் காம்பு அழுகிப் போகும். விரலால் தொடுத்தால் வெம்பிப் போய்விடும். அதனால் தங்கத் துரட்டி கொண்டு நான் இறைவனுக்கு மாலையாகத் தொடுக்கிறேன்.
ஒப்பிடு :
புதுக்கவிதையில் தொடுக்கும் பூ மரணத்திற்குப் போடப்படுகிறது. ஆனால் நாட்டுப்புறப் பாடலில் தொடுக்கும் பூ இறைவனுக்குப் போடப்படுகிறது. இருவரும் தொடுக்கும் பூ ஒன்றே ஆனால் அது போய் சேர்கின்ற இடம் தான் வெவ்வேறாக இருக்கிறது.
Question 34.
அடிபிறழாமல் எழுதுக. (அ) “அருளைப் பெருக்கி” எனத் தொடங்கும் ‘நீதிவெண்பா ‘ பாடல்.
Answer:
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருத்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று (- கா.ப. செய்குதம்பிப் பாவலர்)
(அல்லது)
(ஆ) “தூசும் துகிரும்” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
Answer:
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; (- இளங்கோவடிகள்)
பிரிவு – 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 × 3 = 6]
Question 35.
‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Question 36.
பொருள்கோள் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
Answer:
- செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள்’ என்று பெயர்.
- பொருள்கோள் எட்டு வகைப்படும்.
- ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறிபாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆகியன.
- இவற்றுள் ஆற்றுநீர்ப் பொருள்கோள், நிரல் நிறைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.
Quetion 37.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
வெட்சித் திணை :
ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.
கரந்தைத் திணை :
கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர்.
(II) வஞ்சித் திணை :
மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை.
காஞ்சித் திணை :
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல்) காஞ்சித்திணை.
(III) நொச்சித்திணை
கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூ.டி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை.
உழிஞைத்திணை
மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச்சுற்றிவளைத்தல் உழிஞைத்திணை.
பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 × 5 = 25]
Question 38.
(அ ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்,
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
Answer:
தமிழ்த்தாய் வாழ்த்து:
தமிழ்த்தாயை சுந்தரனார் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், நீரலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்ற கடலைத் தன் ஆடையாய் உடுத்திக் கொண்டுள்ள நிலமாகிய பெண்ணுக்கு அழகிய முகமாகத் திகழ்வது பாரத கண்டம். அம்முகத்திற்கு அழகிய பிறை போன்ற நெற்றியாகத் திகழ்வது. தெற்குப்பகுதி, அந்நெற்றியில் இட்டுக்கொண்ட குங்குமம் போல புகழ் ஒளி வீசித் திகழ்வது திராவிட நாடு. அக்குங்குமத்தின் வாசனையைப் போல் அனைத்துப் பகுதி மக்களும் இன்பம் அடையும்படி எட்டுத் திசைகளிலும் பரவி வாழ்கின்ற தமிழ் என்னும் தெய்வமே தொன்று தொட்டு வாழ்ந்தாய் என்றாலும் உன் பெருவாழ்வு புதுமைக்குப் புதுமையாய் இன்றும் இளமையாய் விளங்குகிறது. தமிழ்த்தாயே உன் பேராற்றலை வியந்து செய்வதறியாது மெய்மறந்து வாழ்த்துகின்றோம் என வாழ்த்துகின்றார்.
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்து:
அழகாய் அமைந்த செந்தமிழே! அன்னை மொழியே! பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே பாண்டிய மன்னனின் மகளே ! திருக்குறளின் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் உன்னைத் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என பெருஞ்சித்திரனார் தமிழ்த்தாயை வாழ்த்துகின்றார்.
(அல்லது)
(ஆ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…. இவ்வுரையைத் தொடர்க!
Answer:
தண்டலை மயில்கள் ஆட
உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை கவிஞரின் உலகம் இட எல்லை அற்றது கால எல்லை அற்றது. கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக்கொண்டு எழுப்புகிறான். அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன. கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன. விழுமியங்கள் துணைபுரிகின்றன. ஒப்புமைகள் துணைபுரிகின்றன. கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லையாகிறது. கம்பன் அப்படிப்பட்ட கவிஞன் அதனால்தான் கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பாரதி பெருமைப்படுகிறார்.
ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது. கவிதை கவிஞன் மூலம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது. அது எப்படி வருகின்றதோ அதை மாற்றினால் அழகு குன்றும் மீண்டும் மீண்டும் மறிதரும் சந்தம் உணர்வுகளை நம்முள் செலுத்துகிறது உள்ளம் சூறையாடப்படுகிறது.
இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது. ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது. இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘ஐயோ’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான். கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடிலும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று பாரதி சொல்வதை இதில் உணர முடியும். உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கண்முன் எழுப்புகிறது.
இவ்வாறு கம்பன் கவி மனதை விட்டு நீங்காது என்றும் நிறைந்திருக்கும் என்று தன் உரையை முடிக்கிறார்.
Question 39.
(அ) உங்கள் பள்ளியில் பயிலும் மேல்நிலை வேதியியல் மாணவர்களுக்காக சில வேதியியல் இரசாயனப் பொருட்களை மொத்தமாகவும், தள்ளுபடி விலையிலும் வழங்குமாறு விஞ்ஞான கூடத்திற்கு ஒரு விண்ணப்பம் வரைக.
Answer:
அனுப்புநர்,
தலைமையாசிரியர்,
அரசினர் மேல்நிலைப் பள்ளி,
சூளைமேடு,
சென்னை – 600 013.
பெறுநர்,
தலைமை விஞ்ஞானி,
எம்.எஸ்,விஞ்ஞான கூடம்,
சென்னை – 600 001.
ஐயா,
பொருள்: ஆய்வு கூடத்திற்கு இரசாயனப் பொருள் வாங்குவது – தொடர்பாக வணக்கம். எங்கள் பள்ளியில் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆய்வுக்காகச் சில வேதியியல் இரசாயன பொருள்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பொருட்களைத் தள்ளுபடி விலையில் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் தங்களுடைய பழைய வாடிக்கையாளர் என்பதாலும், அதிக அளவில் பொருட்களைச் தங்களிடம் வாங்குவதாலும், இராசயனப் பொருட்களை எங்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொருட்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இடம்: சென்னை
தேதி: 20. 4. 2019
இங்ங னம்,
உங்கள் உண்மையுள்ள,
கவிதா.
உறைமேல் முகவரி
பெறுநர்
தலைமை விஞ்ஞானி ,
எம்.எஸ்,விஞ்ஞான கூடம்,
சென்னை – 600 001.
(அல்லது)
(ஆ) விபத்தில் அடிபட்ட உறவினருக்கு ஆறுதல் மடல் எழுதுக.
Answer:
13. காந்தி சாலை,
சென்னை – 04.
அன்புள்ள மாமா அவர்களுக்கு,
வணக்கம். இங்கு யாவரும் நலம். ஆண்டவனருளால் உங்கள் உடல் நலம் சீர்பெற்று வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும்பொழுது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்ததும் பதறிவிட்டேன். தாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னரே அலுவலகம் செல்லுங்கள். தேர்வு முடிந்து விடுமுறை வரும் பொழுது உங்களை நேரில் வந்து சந்திக்கின்றேன். தாங்களைக் காண முடியாதது வேதனையைத் தருகிறது என்றாலும், தேர்வு கருதி படிப்பில் ஈடுபடுகின்றேன். உடல்நிலையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு மருமகன்,
சு. சுந்தர்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
ச.கண்ண ன்,
30, சண்முகம் தெரு,
மதுரை – 10.
Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற எழுதுக.
Answer:
விடை:
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
நெகிழி தவிர்த்தால் சுத்தமான காற்றையும் பெறலாம்
ஆரோக்கியமான மண்ணையும் பெறலாம்.
Question 41.
விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
Answer:
Question 42.
(அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன்
பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Answer:
- எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் தோழனுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவேன்.
- திறன்பேசியில் விளையாடும் தங்கைக்குப் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவேன்.
- தொலைக்காட்சியில் நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பியை இயற்கை அழகினை ரசிக்க வைப்பேன்.
- ஒருவரோடு ஒருவர் பேசி மகிழவேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
(அல்லது)
மொழிபெயர்க்க.
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothus is very popular among rural areas.
Answer:
விடை:
தெருக்கூத்து
தெருக்கூத்து என்பது பெயரைப் போலவே தெருக்களில் நடைபெறும் புகழ் பெற்ற கூத்தாகும். இது நாட்டுப்புறக் கலைஞர்களால் அரங்கேற்றப்படுகிறது. இதன் கதைகள் இதிகாசமாகிய இராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களைத் தழுவியது. இதில் மிகையாக பாடல்கள் இடம் பெறுதலும் கதை விமர்சனங்கள் கூத்தாடிகள் உடனுக்குடன் தானே முன்முயற்சியின்றி உரைப்பவையாக இருக்கும். தெருக்கூத்து 15 முதல் 20 கூத்தாடிகளுடன் கூடிய இசைக்குழுவினருடன் கூடியது ஆகும். இசைக் குழுவினரிடம் பாடகர் இருப்பினும் தெருக்கூத்தாடிகள் தானே முனைந்து பாடுவார்கள். தெருக்கூத்தாடிகள் அபார ஆடை அலங்காரமும் பளிச்சென்ற தோற்றத்துடனும் காணப்படுவர். தெருக்கூத்து நாட்டுப்புறங்களில் பிரசித்தி பெற்றதாகும்.
பகுதி – V (மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 × 8 = 24]
Question 43.
(அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
Answer:
முன்னுரை:
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொது என்றாலும் தமிழ் மட்டுமே அதில் தலை சிறந்ததாகும். தமிழின் சொல் வளத்தை நாம் பலதுறைகளிலும் காணலாம்.
தமிழின் சொல் வளம்:
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலையைக் குறிக்க ஒரே ஒரு சொல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்மக்கள் இலையை அதன் வன்மை, மென்மை, இவற்றைக் கொண்டு இலை, தோகை, ஓலை என பாகுபாடு செய்துள்ளனர். இதுமட்டுமன்றி தாவரங்கள், மணிவகை, இளம்பயிர்வகை, காய்கனி வகை, அடி, கிளை கொழுந்து என அனைத்து உறுப்புகளுக்கும் சொற்களைப் பகுத்து வைத்துள்ளனர்.
பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்:
அரும்பு: பூவின் தோற்றநிலை போது, பூ விரியத் தொடங்கும் நிலை மலர், பூவின் மலர்ந்த நிலை, வீ: மரம், செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை செம்மல், பூ வாடின நிலை
தமிழின் பொருள் வளம்:
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையது என்பது அதன் வினைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். தமிழ் நாட்டு நெல்லில் செந்நெல் வெண்ணெல், கார்நெல் என்றும், சம்பா, மட்டை, கார் என்றும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம் பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலிச்சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன. இவற்றோடு வரகு, காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ் நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.
முடிவுரை:
பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர். ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கு உதவுவது மொழியேயாகும். ஆகவே “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்ற கூற்றின்படி பொருட்களைக் கூர்ந்து நோக்கி நுண்பொருட் சொற்களை அமைத்துக் கொள்வது நம் தலையாய கடமையாகும்.
(அல்லது)
(ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answer:
- அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
- பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக்
கூடியதாக இருக்கிறது. - நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
- தோலில் செய்தவெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
- தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும்
பெயர் பெற்றது. - இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
- கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
- இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
- பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
- • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
- தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
- நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
- ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும்.
- பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
- அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
- எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப் பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
- பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Question 44.
(அ) இராமானுசர் நாடகக் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை:
நாளுக்கு ஒருமுறை மலர்வது சண்பகம். ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி. நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள். அவர்களுள் இராமானுசர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தண்டு, கொடியுடன் பூரணர் இல்லம் அடைதல் :
திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இராமானுசர் – கூரேசர் முதலியாண்டான் ஆகியோர் பூரணர் இல்லத்திற்கு வந்தனர். சுவாமிகளே ! வணக்கம்! தங்கள் கட்டளைப்படி புனித திருமந்திரத் திருவருளுக்காக வந்துள்ளோம் என கூரேசர் பூரணரிடம் கூறினார். தண்டு; கொடியுடன் உங்களைத்தானே வரச் சொன்னேன் பிறகெதற்குத் தாங்கள் உறவுகளை உடன் அழைத்து வந்துள்ளீர்கள் என பூரணர், இராமானுசரிடம் கேட்டார். அதற்கு சுவாமிகள் என்மேல் கோபம் கொள்ளக் கூடாது. தங்கள் விருப்பப்படியேதான் வந்துள்ளேன். தாங்கள் கூறிய தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே அடியவர்களாகிய எங்கள் மேல் கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும் என்று இராமானுசர் கூறினார். உடனே பூரணர் இவர்களை நீங்கள் தண்டு, கொடி எனக் கூறியதால் உங்கள் மூவருக்குமாகத் திருமந்திரத்தைக் கூறுகிறேன் என்றார்.
பூரணர் கட்டளை:
பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். நான் கூறப் போகின்ற திருமந்திர மறைபொருள்கள் உங்கள் மூவருக்கு மட்டுமே தெரிய வேண்டும். வேறு யாரிடமாவது இதை நீங்கள் கூறுவீர்கள் எனில், அது ஆசிரியர் கட்டளையை மீறியதாகும். அப்படி நடந்தால் அதற்குத் தண்டனையாக நரகமே கிட்டும். ஆச்சாரிய நியமத்தை மீறிய பாவிகளாக நீங்கள் மாற மாட்டீர்கள் என்னும் நம்பிக்கையுடன் திருமந்திரத்தைக் கூறுகிறேன் என்று கூறி பின்னர், ‘திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்’ என்ற திருமந்திரத்தை பூரணர் கூற மூவரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள். ஆண்டவனின் அடியவர்களாகிய எங்களுக்கு திருவருள் கொண்டு திருமந்திரம் கூறியமைக்கு மிக்க நன்றி என்று கூறி விடைப்பெற்றனர்.
பொதுமக்களுக்கு மந்திரத்தை கூறுதல்:
திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணன் திருக்கோவிலின் மதில் சுவரின் மேல் இராமானுசர் நின்று கொண்டு, கீழே பொதுமக்களுடன் கூரேசரும், முதலியாண்டானும் நின்றுக் கொண்டு உரத்த குரலில் பக்தியால் முக்திக்கு வழிகாணத் துடிப்பவர்களே! அருகில் வாருங்கள் அனைவரும். இன்னும் அருகில் வாருங்கள் கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச் சொல்லுங்கள் என இராமானுசர் பொதுமக்களிடம் கூறினார். இராமானுசருடன் சேர்ந்து அனைவரும் மூன்று முறை கூறுகின்றனர்.
கோபம் கொண்ட பூரணர்:
பூரணரின் வார்த்தையை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம், இராமானுசர் மன்னிப்பு கேட்டார். ஞான குருவே ! முதலில் எம்மை மன்னித்தருளுங்கள். நாங்கள் செய்த இரண்டகத்திற்குக் கொடிய தண்டனையான நரகமே கிட்டும் என்பதை நான் மறக்கவில்லை என இராமானுசர் பூரணரிடம் கூறினார்.
பூரணருக்கு இராமானுசர் அளித்த விளக்கம்:
கிடைப்பதற்கரிய மந்திரத்தைக் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயன் எனக்கு மட்டுமே கிட்டும். அந்த அருமந்திரத்தை அனைவருக்கும் கூறினால், உழன்று பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணி நீங்கி பேறு பெறுவார்கள். இதனால் நான் மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்று நரகத்தைச் சேர்வேன். ஆனால் என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் என இராமானுசர் விளக்கமளித்தார்.
இராமானுசருக்கு பூரணர் ஆசி வழங்குதல்:
இராமானுசரிடம் பூரணர் உங்களுக்கு இருந்த பரந்த அருள் உள்ளம் இதுவரை எனக்கு இல்லாமல் போனதே என்று கூறி அவரை மன்னித்து ஆசி வழங்கி, என் மகன் சௌம்ய நாராயணனைத் தங்களிடம் அடைக்கலமாக அளிக்கிறேன் என்றார்.
இராமானுசர் விடை பெற்று செல்லுதல் :
பூரணரிடம், இராமானுசர் முன்பு கிடைப்பதற்கரிய திருமந்திரத்தை எமக்களித்தீர்கள். இன்றோ உங்களின் அன்புத் திருமகனையும் எமக்களித்துள்ளீர்கள். நான் பெரும் பேறு பெற்றவன் ஆகிவிட்டேன். மிக்க மகிழ்ச்சி விடை தாருங்கள்! புறப்படுகிறோம் என்று கூறி விடைப் பெற்றார்.
முடிவுரை:
இராமானுசர் புனித திருமந்திரத் திருவருள் தனக்கு மட்டுமே கிடைத்தால் தான் ஒருவனுக்கு மட்டுமே என்ன பயன் எனக் கருதி எளிய மக்களுக்கும் திருமந்திரத்தைக் கூறி பிறவிப்பிணியை நீக்கியவர்.
(அல்லது)
(ஆ ) ‘பாய்ச்சல்’ துணைப்பாடப் பகுதியின் கதையைச் சுருக்கி எழுதுக. முன்னுரை:
உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவான். கலை நிகழ்வின் ஊடாக அவன் பெருமிதம், வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். தன்னொத்த கலைஞர்களிடமிருந்து வேறுபட்டுத் தமக்கெனத் தனித் தன்மைகளைக் காட்டுவான்.
அழகு கண்ட காட்சி :
அழகு, தலையை நீட்டிப் பார்த்தான். இவனையொத்த சிறுவர்கள் புழுதி பறக்க ஓடிக்கொண்டு இருந்தார்கள். நாதசுரமும், மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தது. இவன் குனிந்து பார்த்தான். இரண்டு கால்கள் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதக் கால்களிலிருந்து மாறுபட்டு இருப்பதைக் கண்டான்.
அனுமார் காட்சி :
அனுமார் வலது காலையும், இடது காலையும் மாறி மாறித் தரையில் உதைத்து வேகமாகக் கைகளை வீசி நடக்க ஆரம்பித்தார். சதங்கையும், மேளமும், நாதசுரமும் ஒன்றாக இழைந்தன. அனுமார் தாவிக் குதித்துக் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து சென்றார். நீண்ட வால் மேலே சுழன்று சரேலென்று தரையில் படர்ந்து புழுதியைக் கிளப்பியது.
திடீரென்று மேளமும், நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. அழகு அவர்கள் அருகில் சென்றான். அருகில் அழகு சென்றதும் வாலைக் கொடுத்துவிட்டுக் கைகளை நன்றாக உதறியவாறு ‘ஓம் பேரு’ என்றான்.
அனுமார் பாய்ச்சல்:
அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது. பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார். ஆட ஆட, புழுதி புகைபோல் எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது. ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
அழகின் அனுமார் ஆட்டம் :
அழகு எழுந்து தரையில் கிடந்த வாலை இடுப்பில் கட்டிக் கொண்டு சதங்கையை எடுத்தான். கையிலிருந்த சதங்கை கீழே நழுவ அச்சத்தோடு அனுமாரைப் பார்த்தான். காலில் சதங்கையைச் சுற்றிக்கொண்டு அனுமார் மூஞ்சியை எடுத்து மாட்டிக்கொண்டு தான் கண்டதையெல்லாம் மறுபடியும் மனதில் இருத்தி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தான். முதலில் மரத்தில் இருந்து கீழே குதிக்கும் ஆட்டத்தை ஆடினான். இவன் ஆட்டம் தாளகதிக்கு மிகவும் இணங்கி வருவது அனுமாருக்கு மகிழ்ச்சி அளித்தது. அழகு சாய வேட்டியை வாலின் நுனியில் சுற்றி நெருப்பு வைத்தான். வாயால் ஊதி நெருப்பைக் கனிய வைத்துப் பெரிதாகக் கத்திக்கொண்டு அனுமாரை நோக்கிப் பாய்ந்தான். மாறாத புன்னகையோடு துள்ளித் துள்ளி கையும் காலும் குழைந்து நெளிய ஆடினான். அனுமார் அவனை உற்றுப் பார்த்தார். மனம் தன்னிலை இழந்தது.
முடிவுரை:
இக்கலைஞனின் கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ உடற்சோர்வோ, பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது அவன் கொள்கிற மகிழ்ச்சியும், பெருமிதமும் அளப்பரியது.
Question 45.
(அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி
முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்காக நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.
கண்ணை கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருந்தார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுத்தது.
கலை பண்பாட்டு அரங்குகள்:
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.
குழந்தைகளுக்கான அரங்குகள்:
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும் துப்பறியும் நாய்களின் . வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும்.
அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய் கனி வகைகளும் இழுவைப்பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.
அங்காடி வீதிகள்:
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கு உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.
(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – வீரபாண்டிய கட்டபொம்மன் – மருது சகோதரர்கள் சரணைடதல் – வீரமங்கை வேலுநாச்சியார் – தேசியக் கவி பாரதியார் – திருப்பூர்க் குமரன் – முடிவுரை.
Answer:
விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
முன்னுரை:
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். எத்தனை கண்ணீர்களின் கதை இது. இன்று நீ சிந்தும் புன்னகை ஒவ்வொன்றிற்கும் கொடுத்த விலை எத்தனையோ?
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ” (- எனும்)
பாடலைப்போல தியாகிகள் செய்த தியாகங்கள் எத்தனையோ, ஆண், பெண் வேறுபாடின்றி அன்னியனை விரட்டிய கதைகள் எத்தனையோ.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
அன்னியர் எண்ணங்களை எல்லாம் சின்னாபின்னமாக்கிய முன்னோடியாகக் கருதப்படுபவர் வீரபாண்டிய கட்டபொம்மனே (1760 – 99) ஆவார். பாஞ்சாலாங்குறிச்சியின் சரித்திரப் புதல்வனாய் ஆங்கிலேயருக்கு வட்டி கொடுக்க மறுத்து இராமநாதபுரம் பாளையக்காரர்களுடன் இணைந்து
ஆங்கிலேயன் மேல் போர் தொடுத்ததை நாடறியும். போரில் பின்னடைவு ஏற்பட்டாலும், புதுக்கோட்டையில் அடைக்கலமானபோது விஜயரகுநாத தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்டவர். இறுதிவரை வணங்காமுடியாய் இருந்தவர், கயத்தாற்றில் கயிற்றினுக்கு இரையானபோதும், இம்மண்ணினை நோக்கியபடியே இறந்திட வேண்டுமென்று முகத்திற்கு திரை இடாதவன் என கட்டபொம்மனின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மருது சகோதரர்கள் சரணடைதல்:
18-ஆம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் நெற்கட்டும் செவலில் குறுநில மன்னனாக 1714ல் பிறந்த பூலித்தேவனும், உயிர்போயினும் ஒரு நெல் மணிகூட வரியாகத் தர இயலாது என மறுத்து போர்க்கொடி தூக்கியவன். பாளையக்காரர் துணையுடன் 17 ஆண்டுகள் போரிட்டு இறுதியில் 1764ல் வீரமரணம் அடைந்தார்.
சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் தங்களுடைய உள் விவகாரங்களில் ஆங்கிலேயர் தலையிடுவதை எதிர்த்தனர். இவர்கள் போர் தொடுக்குமுன் ஆங்கிலேயர் தலையிடுவதை எதிர்த்தனர். இவர்கள் போர் தொடுக்குமுன் ஆங்கிலேயர் சிவகங்கையை 1801ல் தாக்கினார்கள். நான்கு மாதங்கள் போர் நடந்தது. மருது சகோதரர்கள் தலைமறைவாயினர். அவர்களைப் பிடித்திட அன்னியருக்கு இயலவில்லை. “பாண்டியனே, நீ வெளிவரவில்லையானால் நீ கட்டிய காளையர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்படும்” எனக் கூறியதால் மருது சகோதரர்கள் தாமாகவே முன்வந்து சரணடைந்தபோது தூக்கிலிடப்பட்டனர்.
வீரமங்கை வேலுநாச்சியார்:
வடக்கே ஜான்சி ராணிக்கு ஈடாக தமிழ் மண்ணிற்கு 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரைச் சொல்லலாம். சிவகங்கைச் சீமையை ஆண்ட முத்துவடுகநாதருக்கு துணையாக வாளேந்திப் போர் புரிந்தார். கர்னல் ஸ்மித்துடன் செய்த போர் குறிப்பிடத்தக்கது. இறுதியில் இம்மண்ணிற்காக உயிர் துறந்தார்.
தஞ்சைத் தமிழ் மகளாகிய தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் தம் பதினாறு வயதினிலே போராட்டத்தில் உயிர் நீத்தார். கறுப்பர் – வெள்ளையர் போராட்டத்தில் வெள்ளையன் ஒருவன் காந்தியைச் சுட முயன்ற போது தன்னைச் சுடுமாறு வீர முழக்கமிட்டார். 16 வயதான அவர் பலரும் வியக்கும் வண்ணம் போராடினார். காந்தியுடன் சிறை சென்றார். சிறையினில் நோய் ஏற்பட்டு 1914ல் இன்னுயிர் நீத்தார்.
தேசியக் கவி பாரதியார்:
தமிழ் வளர்த்து சுதந்திரக் கனல் வளர்த்த எட்டையபுரக்கவி,
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” (- என )
மொழிந்து 30 கோடி மக்களை ஒன்றாக்கிய பாரதியாரைத் ‘தேசியக் கவி’ என்று அழைப்பதைவிட வேறு எங்ஙனம் அழைப்பதுவோ! சுதேசமித்திரன், இந்தியா போன்ற நாளிதழ்களில் பணியாற்றி மக்களிடையே விடுதலை உணர்வை வளர்த்தார். சிறைவாசங்கள் அவரை சினப்படுத்தியதே அல்லாமல் சாந்தப்படுத்தவில்லை. தம் உணர்வுகளை எல்லாம் பாலாக கிண்ணத்தில் வழங்கிய கவி தன் 39வது வயதில் கோயில் யானை தாக்கியதால் காயம் ஏற்பட்டு இறந்தார்.
திருப்பூர்க் குமரன்:
அறப்போராட்டத்தில் நமது துணிவு கண்டுதான் ஆங்கிலேயன் அச்சம் கொண்டான். அத்துணிவிற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் கொடிகாத்த குமரன். திருப்பூர் அவரது பிறப்பிடமாகும். காந்தியடிகள் கைதானதை (1932) எதிர்த்து திருப்பூரில் தொண்டர் படைக்குத் தலைமை தாங்கிச்.
செல்லும்போது ஆங்கிலேயர் எடுத்த எடுப்பிலேயே தடியால் தாக்கினர். தலையில் பலத்த அடி. இரத்தம் பெருகலாயிற்று. குமரன் மனம் தளராது கொடியினைப் பிடித்து நின்றார். மயக்கம் வரும்போதும் கொடியைத் தவறவிடவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்தும் பயனில்லாமல் உயிர் நீத்தார்.
அன்று கொடியின் துணி மண்ணிடை வீழாமல் பறந்தது. இன்றோ திருப்பூர் நகரின் துணி எங்கும் பறக்கின்றது, வியாபாரத்தில்தான்!
முடிவுரை:
பெறுவதற்குரிய சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு, இரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை’ என்று முழக்கமிட்டால் யாது பயனுமில்லை.
மலர் வேண்டுமானால் முட்களை ஏற்றுக்கொள்,
பகல் வேண்டுமானால் இரவு முடியும் வரை பொறுத்துக்கொள்,
தியாகிகளின்மேல் அன்பிருந்தால் நினைவுச் சின்னங்களை
எழுப்பிக் கொள்.
நாடு முன்னேற வேண்டுமானால்
உழைக்கும் தன்மையை வளர்த்துக்கொள். கடந்து வந்த
பாதையைப் புரிந்துகொள்.